மல்லிகையினை தமிழர்கள் பூஜை, விழாக்கள் என்பதை தாண்டி தங்களது அன்றாட வாழ்விலும் பயன்படுத்தும் பூக்களில் முதன்மையானதாக கொண்டுள்ளனர். அதனால், மல்லிகை சாகுபடி எப்போதும் விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் என்றே இன்றளவும் கூறப்படுகிறது.
மல்லிகை சாகுபடியானது ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில், மல்லிகையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொள்வது எப்படி என, முனைவர்களாகிய தமிழ்செல்வி, தனுஷ்கோடி, யோகமீனாட்சி, விஜயசாந்தி, மற்றும் பானுமதி ஆகியோர் கட்டுரை ஒன்றினை தொகுத்து கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளனர். மல்லிகை சாகுபடி கடும் பனியால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஊட்டச்சத்துகளை சரியான முறையில் வழங்குவதற்கு ஏதுவாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-
மல்லிகையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், பின்பு ஜுன் - ஜுலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும்.
தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும் மற்றும் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்
நிவர்த்தி- யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.
மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- முதிர்ந்த இலைகளில் இளஞ்சிவப்பு நிற மாக்கம் ஏற்படும்
- செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்
நிவர்த்தி-டி.ஏ.பி 2% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.
சாம்பல்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- அறிகுறிகள் முதன் முதலில் முதிர்ந்த இலைகளில் காணப்படும்
- இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை தோன்றும்
- இலைகளின் முனைகளில் காயத் தொடங்கி நுனி வரை காய்ந்துவிடும்
சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- இலையின் வளர்ச்சியை நிறுத்திவிடும்
- புதிதாக வளரும் இலைகள் மற்றும் செடியின் நுனிகள் கருகி காணப்படும்
நிவர்த்தி- சுண்ணாம்புக் க்ளோரைடு 1-2% தழை தெளிப்பாக தெளிக்கவும்
மெக்னீசியச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தோன்றும்
- இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
நிவர்த்தி- மெக்னீசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்
கந்தகச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் வெளிரிய பச்சை நிறத்தில் தென்படும்
- வளர்ச்சி குன்றி காணப்படும்
- இலையின் முனைகள் பச்சையாகவே இருக்கும்
- தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டால் முழு இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
நிவர்த்தி- சுண்ணாம்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
Read also: தக்காளியுடன் ஊடுபயிர் போட எந்த செடி நல்ல சாய்ஸ்?
போரான் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- புதிதாக வளரும் இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்
- செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்
- நரம்பின் மேல் பசுமை சோகை கீற்றுகள் செங்குத்தாக காணப்படும்
- இலைகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும்
- பூக்களின் வளர்ச்சி தடை செய்யப்படுகின்றது
நிவர்த்தி- போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்
இரும்புச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையும் காணப்படும்
- பின்பு இலைகள் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்
- முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்
நிவர்த்தி- இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.
தாமிரசத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
- இலைகள் சுருண்டும், உருமாற்றம் ஏற்பட்டு புதர் போன்று வளர்ச்சியடையும்
நிவர்த்தி
- தாமிர சல்பேட் 2 – 5 கிராம் / செடி மண்ணில் கலந்து இடவும்
- தாமிர சல்பேட் 0.25% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.
மெக்னீசிய சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
- இலைகள் மஞ்சள் நிறமாகவும் நரம்புகள் பச்சை நிறமாகவும் தென்படும்
- இலைகள் திடமாக மாறிவிடும்
நிவர்த்தி
- மெக்னீசியம் சல்பேட் 5 - 10 கிராம் / செடி மண்ணில் கலந்து இடவும்
- மெக்னீசியம் சல்பேட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.
துத்தநாகச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:
- இலைகள் சிறியதாக மாறிவிடும்
- இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்
நிவர்த்தி- துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும். மேற்குறிப்பிட்ட முறைகளை முறையாக கையாண்டு மல்லிகையில் ஊட்டச்சத்து மேலாண்மையினை பராமரியுங்கள். மேற்கொண்டு ஏதேனும் சந்தேகங்கள்/ தகவல்கள் தேவைப்படுமாயின் அருகிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தினை தொடர்புக் கொள்ளுங்கள்.
Read also:
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப்பாசனம்- அரசுக்கு முன்மொழிவு