அரசு விதைப்பண்ணைகள் மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உர உற்பத்தி மையம் (Fertilizer Production Center)
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் உயிர் உர உற்பத்தி மையம் உள்ளது.கடந்த 2011-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்ட்டீரியா உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
250 டன் உரம் உற்பத்தி (Production of 250 tons of compost)
ஆண்டு தோறும் சுமார் 250 டன் அளவுக்கு உரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஈரோடு மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் இந்த உர உற்பத்தி மையம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரம் நிதியில் உயிர் உர உற்பத்தி மையமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 50 ஆயிரம் லிட்டர் திரவ உயர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதையொட்டி, குருப்பநாயக்கன் பாளையம் உயிர் உர உற்பத்தி மையத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு, உயிர் உர உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்குள்ள விதைப்பண்ணையில் 4 ஏக்கர் பரப்பளவில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு உள்ள பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி மற்றும் 3 ஏக்கர் பரப்பளவில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு உள்ள அறுபதாம் குறுவை ஆகிய நெல் நாற்றாங்கால்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
பாரம்பரிய நெல் ரகங்கள் (Traditional paddy varieties)
பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த மையம் மூலம் பவானி வட்டாரத்துக்கு உள்பட்ட 20 வருவாய் கிராமங்கள், 3 பேரூராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை மூலம் கடந்த ஆண்டு 110 டன் நெல் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நடப்பு ஆண்டு உயர் விளைச்சல் நெல் ரகங்களான ஏ.டி.டி.38, கோ 52, கோ (ஆர்) 50, ஏ.டி.டி.39, சி.ஆர்.1009 சப்1, வி.ஜி.டி.1 மற்றும் சி.ஓ.எச். (எம்) 8 மக்காச்சோளம் ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய முயற்சி (New attempt)
மேலும் தமிழக அரசின் புதிய முயற்சியாகப் பாரம்பரிய நெல் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அரசு விதைப்பண்ணைகள் மூலம் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கம் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆட்சியர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...