நெல் ஜெயராமனின் நினைவாக, டிசம்பர் 6ம் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், பாரம்பரிய நெல் இரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தியவர்.
தனது சீரிய முயற்சியால், அரிய 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவசாயிகள் நெல் ஜெயராமனின் நினைவாக, டிசம்பர் 6ம் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே நெல் ஜெயராமனின் நினைவு நாளையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் குளூர் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் விவசாயி கே.எஸ்.ராஜேஸ்வரன் என்பவரின் 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
குறிப்பாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, கருமருது, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க மரங்கள் நடப்பட்டன.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மேலும் படிக்க...
50% மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் - உதகை பெண்களுக்கு அழைப்பு!