ஊரடங்கால் தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயம் (Coconut Farming) சார்ந்த 10 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர்.
தென்னை சாகுபடி
இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் டெல்டா விவசாயிகளின் 2-வது வாழ்வாதாரமாக தென்னை சாகுபடி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி (Cultivation) செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை தேங்காய்கள் அளவு, சுவை, மனம் போன்றவற்றில் பெயர் பெற்றுள்ளது. இதனால் உலகளவில் விரும்பப்படும் இப்பகுதி தேங்காய் புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு விருப்பமாக உள்ளது.
கஜா புயல்
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் (kaja storm) சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 1.50 லட்சம் தென்னைகள் சாய்ந்தன. கடந்த 20 மாதங்களுக்கு மேலாக தேங்காய் வருவாய் இன்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர். தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தென்னை உற்பத்தி பெருகி மீண்டு வந்தனர். தற்போது உலகத்தையே புரட்டிபோட்டு வரும் கொரோனா வைரஸால் (Corona Virus) தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் போக்குவரத்து கிடையாது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் விவசாயிகளிடம் வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வெட்ட முடியாத அவலம்
சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் இருந்து ஒரு நாளில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கேயம், வெள்ளக்கோவில் போன்ற பகுதிகளுக்கும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது போக்குவரத்து இல்லாததால் வெட்டிய தேங்காய்கள் விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளில் குவி்த்து வைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் , தேங்காய் வெட்ட முடியாமல் மரங்களில் காய்த்து அப்படியே உள்ளது.
வேலை இழப்பு
இதனால் விவசாயிகள் மட்டுமன்றி ஒரு நாளில் ரூ.500 முதல் ரூ.1000 வரை வருமானம் ஈட்டி குடும்பம் நடத்தி வந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி, தேங்காய் வெட்டும் தொழிலாளி, லாரிகளில் ஏற்றி இறக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
பொங்கல் கரும்பு உற்பத்திக்கு, விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணி தீவிரம்
பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை