இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ 139 கோடி. இவற்றில் 65 கோடி பேருக்கான வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கும் ஒரே துறை விவசாயமே. தற்போது நவீன தொழில்நுட்பங்களால் சாகுபடியில் நாம் முன்னேற்றம் கண்டாலும், அடித்தட்டு விவசாயிகள் பொருளாதாரளவில் முன்னேற முடியாமல் இன்றளவும் தத்தளிக்கின்றனர்.
விவசாய பணியை மேற்கொள்ள கடன் வாங்கும் விவசாயிகள் அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்யும் நிலை மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையடையச் செய்கிறது. உண்மையில் பிரச்சினை எங்குள்ளது? இதனை எவ்வாறு அணுகி தீர்வு காண்பது என பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் வேளாண் ஆலோசகரான அக்ரி.சு.சந்திரசேகரன். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
இந்தியாவில் வேளாண் வளர்ச்சி:
சுதந்திர விடுதலைக்கு பிந்தைய இந்தியாவின் வேளாண் வளர்ச்சியை 3 கால கட்டங்களாக பிரிக்கலாம்.
1) தொடக்க காலம் (1950- 60): இந்த காலக்கட்டமானது இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அற்ற வளர்ச்சியைக் கொண்டிருந்தது.
2) பசுமை புரட்சி காலம்: (1961- 1990) இந்த காலக்கட்டத்தில் உணவு பயிர்களான நெல், கோதுமையில் புதிய புதிய ரகங்கள் வெளியீடு செய்யப்பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறவு அடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு விளைப்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டது.
3) உலகமயமாக்கலுக்கு பிந்தைய காலம்: 1991 முதல் இன்றுவரை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாம் சந்தை சார்ந்த வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்.
வேளாண் பட்ஜெட் வாக்குறுதிகள்- வெறும் அறைகூவலா?
இந்தியாவினை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியது நேருவின் கனவு திட்டம் என அழைக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களை குறிப்பிடலாம். முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் தான் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
இந்த திட்டம் "சோவியத் ரஷ்யாவினை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தியாவின் வேளாண் பட்ஜெட்டினை பொறுத்தவரை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், மும்மடங்காக உயர்த்துவோம் என்று அறிவிப்பதோடு சரி, களத்தில் எத்தகைய மாற்றத்தையும் நாம் காண முடிவதில்லை.
Read also: Automatic Drip Irrigation system- விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா?
விவசாயம் சூதாட்ட களமா?
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கு கூட மிஞ்சாது என்பதற்கிணங்க நிலையான வருமானமின்றி தவிக்கின்றனர் விவசாயிகள். இன்னும் எளிமையாக சொல்லப் போனால் சூதாட்டம் போன்று தான் விவசாயம் உள்ளது. அதிர்ஷ்டம் நம்ம பக்கம் வரலாம், வராமலும் போகலாம். வேளாண் பொருட்களின் உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்தும் விவசாயிகளின் வருமானம் உயராமல் இருப்பதற்கான காரணம் என்ன? அவற்றிற்கான தீர்வு என்ன என்பதை காணலாம்.
- விளைப்பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை சாகுபடி செலவை கணக்கிட்டு ஒவ்வொரு பருவத்திலும் நிர்ணயிக்க வேண்டும்.
- எதிர்பாராத பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் பயிர்சாகுபடி பாதிப்பை சரிகட்ட பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். அது நடைமுறையில் இருப்பது போல் இல்லாமல் தனிப்பட்ட இன்சூரன்ஸ் ஆக இருத்தல் வேண்டும்.
- எந்தெந்த பயிர் எந்தெந்த பகுதியில் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலமாக முன்னறிவிப்பு செய்திட வேண்டும்.
- நவீன தொழில்நுட்ப பயிற்சி கிராம அளவில் குறிப்பிட்ட பயிர் சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
- ஒரு பயிர் சாகுபடிக்கு மாற்றாக ஊடுபயிர் கலப்பு பயிர் சாகுபடி முறையினை நடைமுறைப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். (ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டால் கூட மற்ற பயிர் கை கொடுக்கும்.
- ஒருங்கிணந்த பண்னண முறையை சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயி வரை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
- மானியங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு என்று இல்லாமல் விவசாயி சாகுபடி செய்யும் தருணத்தில் வழங்க நடவடிக்கை வேண்டும்.
- கிராமப்புற அளவில் பண்னண இயந்திர கருவிகள் குறைந்த வாடகையில் வழங்க வாடகை மையம் அமைக்க வேண்டும்.
- விவசாயிகளின் உற்பத்திகேற்ப ஊக்கத்தொகை (INCENTIVES) வழங்க வேண்டும்.
- குறைந்த வட்டியில் கடனுதவி மற்றும் இடுப்பொருட்கள் சலுகை விலையில் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் வேளாண்மை வளர்ச்சி வெற்றிகரமாக செயல்பட நாம் செய்ய வேண்டியது, முதலில் கிராமப்புற அளவில் வளர்ச்சி, வட்டார அளவில் வளர்ச்சி, மாவட்ட அளவிலான வளர்ச்சி என படிப்படியாக ஒருங்கிணைத்து மாநில அளவில் கொண்டு செல்ல வேண்டும் என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (94435 70289) கிரிஷி ஜாக்ரன் மூலமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Read more:
வருடத்திற்கு 9 முறை அறுவடை- அடர்நடவு முறையில் முருங்கையில் இலை உற்பத்தி!
5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை- ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் சிறப்பம்சம்!