ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம், குளிர் காபி உள்ளிட்ட, 10 வகையான புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஆவின் நிறுவனம் வாயிலாக, பால் மட்டுமின்றி, 215 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பால் பொருட்களின் விற்பனையை அதிகரித்து, ஆவின் நிறுவனத்தின் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் பால்வளத் துறை இறங்கிஉள்ளது.
பால் பொருட்கள் (Dairy Products)
புதிதாக 10 வகையான பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் என, மார்ச் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது, 10 வகையான பால் பொருட்கள் விற்பனைக்கு தயாராகி உள்ளன. சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், இப்பொருட்களை, பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உள்ளிட்டோர், நேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.
அதன்படி, 125 மி.லி., பலாப்பழ ஐஸ்கிரீம் 45 ரூபாய்; 45 கிராம் வெள்ளை சாக்லேட் 30; 200 மி.லி., குளிர் காபி 35; 200 கிராம் வெண்ணெய் கட்டி 130; 100 மி.லி., பாஸந்தி 60; 250 கிராம் ஹெல்த் மிக்ஸ் 120; 200 கிராம் பாலாடை கட்டி 140; 100 கிராம் அடுமனை யோகர்ட் 50; 75 கிராம் பால் பிஸ்கெட் 12; 200 கிராம் வெண்ணெய் முறுக்கு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இவை, வரும் 22ம் தேதி முதல் ஆவின் பாலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும். சிலவகை பொருட்களை மளிகை கடைகள், வர்த்தக வளாகங்களிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வருமானம் (Income)
பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறியதாவது: தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாறுபட்டு, எவ்வித ரசாயனங்களும் சேர்க்காமல், 10 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 வகையான பொருட்கள் விற்பனை வாயிலாக, மாதந்தோறும் இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படும். இப்பொருட்களுக்கு, அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க