ஒன்றிய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 13 மாநிலங்களில் செயல்படும் 1,851 வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் பதிவாளர் அலுவலகங்களை கணினிமயமாக்கவும், அதிகாரமளிக்கவும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 மாநிலங்களில் உள்ள 1,851 வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை தேசிய ஒருங்கிணைந்த மென்பொருள் மூலம் கணினிமயமாக்கவும், அனைத்து மாநிலங்களிலும் கூட்டுறவு பதிவாளர் அலுவலகங்களை கணினிமயமாக்கவும் மத்திய நிதியுதவி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒரு மத்திய திட்ட கண்காணிப்பு அலகு (பி.எம்.யூ) நிறுவப்படும் எனவும் இது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உதவும் எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.225.09 கோடியாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கூட்டுறவுத் துறைகள் மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சேவைகளை மக்கள் விரைவாகப் பெற முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்:
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 24-வது கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா, தேசத்தின் வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
விவசாயிகள் விளைவிக்கும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) NAFED மூலம் 100% கொள்முதல் செய்யப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இதனுடன், 5 கிமீ சுற்றளவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் வங்கி வசதி, நாட்டில் 2 லட்சம் புதிய PACS உருவாக்கம், ராயல்டி மற்றும் சுரங்கம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய மண்டல கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மாநிலங்கள் நாட்டில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு தானிய உற்பத்தி, சுரங்கம், நீர் வழங்கல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான முக்கிய மையங்களாக உள்ளன. இந்த மாநிலங்கள் இல்லாமல் போதுமான நீர் விநியோகத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது என அமித் ஷா தனது உரையில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஆசிய போட்டியில் முதல் முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களை பாராட்டியும், சந்திராயன்-3, G20 உச்சி மாநாடு வெற்றியினை பாராட்டியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
இதெல்லாம் தெரியாமல் அஸ்வகந்தா விவசாயத்தில் இறங்காதீங்க!
அரசு வேலையை உதறி டிராகன் பழ சாகுபடியில் இறங்கிய நபருக்கு அடிச்சது லக்