1.தமிழ்நாடு அரசின் 'செழிப்பு "- இயற்கை உரம்
மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் செழிப்பு எனும் இயற்கை உரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
2.சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில், அதிக அளவிலான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இருக்க கூடிய தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்து, இலாபமடைய சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 228 ஹெக்டர் நிலங்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனத்திற்காக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ரூ.25,000 அல்லது மின் மோட்டருக்கு ரூ.15,000, தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு ரூ.40,000 மானியமாக வழங்கப்படுகிறது.
3. 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மோக்கா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.
4. மல்லிகைப்பூ (கிலோ) ரூ.840-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.840-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.340-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
5.சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
7 பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், ஒரு பூங்கா மறுசீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் என ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் படிக்க
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்: சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு!
ரேசன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!