தஞ்சாவூர் அருகே தண்ணீர் இல்லாமல், 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy crops) காய்ந்து கருகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை காலம் (Summer) தொடங்கி விட்டது நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் தண்ணீரை திறந்து விட்டால், பயிர்களை காப்பாற்றலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
நெற்பயிர்கள் கருகும் நிலை:
கரூர் மாவட்டம், மாயனுார் தடுப்பணையில் இருந்து பிரிந்து வரும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில், 5,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் (Irrigation) பெறுகின்றன. இப்பகுதியில் பாசனத்திற்காக, கடந்த செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் சாகுபடி (Cultivation) பணியை துவக்கினர். 2,500 ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதில் காலதாமதமாக சாகுபடியை துவங்கிய திருமலைசமுத்திரம், மருதகுடி, அய்யாச்சாமிபட்டி, செல்லப்பன்பேட்டை ஆகிய கிராமங்களில், 1,000 ஏக்கரில் நெல் கதிர்விடும் நிலையில், தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
தண்ணீர் திறந்தால், பயிரை காப்பாற்றலாம்
தற்போது தண்ணீர் இல்லாமல், நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. பொதுப்பணித் துறை (Department of Public Works) அதிகாரிகளிடம் கேட்டால், 'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தண்ணீர் திறக்க முடியாது' எனக் கூறி வருகின்றனர். இரண்டு வாரம் தண்ணீர் திறந்தால், பயிரை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
பொதுப்பணித் துறை மேற்பார்வை பொறியாளர் கண்ணன் கூறுகையில், ''மேட்டூர் அணையில் (Mettur Dam) இருக்கும் தண்ணீர், கோடை காலத்துக்கு குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது. ''மாயனுார் தடுப்பணையில் இருந்து, 140 கி.மீ., துாரமுள்ள செங்கிப்பட்டி பகுதிக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை. தண்ணீர் திறக்க வேண்டுமென்றால், அரசு தான் உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு, தமிழக அரசு விரைவில் தண்ணீர்த் திறக்க வேண்டும். விளைந்த பயிர், கண் முன்னே கருகும் கொடிய வேதனையை புரிந்து கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!
பருத்தி, தேங்காய்க்கு மறைமுக ஏலம்! பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!