தமிழக முதல்வர் அறிவித்துள்ள புதுமை பெண் திட்டத்தில் மேற்படிப்பு, தொழில் நுட்பட படிப்பு மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, முதல்வர் அறிவிப்பின்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்து, மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ம்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர். தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெற https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார் கார்டு மற்றும் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: