மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டதிற்கு மாற்றாக உயர்கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசுப் பள்ளியில் 6 வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கான நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1000 ரூபாய் (1000 Rupees)
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு இவற்றில் ஏதாவது ஒன்றை இடைநிற்றல் இன்றி படித்து முடிக்கும் வரை மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உதவித் தொகை மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி நேரடியாக செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியர் உதவி தொகை பெற தகுதியானவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் முடிவுகள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நாளை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழாவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இவ்விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற இதுவரை 90000 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் படிக்க
ரயில்களை போல பேருந்துகளில் புதிய வசதி: விரைவில் அறிமுகம்.!
வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறையின் கடும் எச்சரிக்கை..!!