வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ஏப்.,1 முதல் ஆக.31 வரை, 1.14 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 2021 - 22ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 5.83 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான, ஜூலை, 31ல், 72 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வருமான வரி (Income Tax)
மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 1.96 கோடி தனிநபர்களுக்கு 61,252 கோடி ரூபாயும், 1,46,871 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரீபண்டாக ரூ.53,158 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில், கடந்தாண்டு ஒப்பிடுகையில் கார்ப்பரேட் வரி வசூல் 34 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இதனிடையே, 2022-23 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி தாக்கல் படிவத்தின் கீழ் ரூ.28 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். மேலும், 2020-21, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு தாக்கல் செய்தோருக்கு ஐ.டி.ஆர் யூ படிவம் கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா கூறுகையில், வரி செலுத்துவோரின் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், சட்டச் சிக்கல்களில் சிக்காமல் அவர்கள் தங்கள் வரிப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். புதிய படிவத்தை தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம்.
இதன்படி, வருமான வரி தாக்கலை புதுப்பிப்பதற்கு, முன்பு தாக்கல் செய்யப்படாத வருமானம் அல்லது வருமானம் சரியாக தெரிவிக்கப்படவில்லை அல்லது தவறான தலைப்பில் தேர்வு செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றிற்கு சரியான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்: கணிணிமயமாகும் ஓய்வூதிய ஆவணங்கள்!
வருமான வரிக்கும் இனி ஜிஎஸ்டி வரி: புதிய கட்டணம் அறிவிப்பு..!