திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி பயிர்சாகுபடியில் ஈடுப்பட்டிருந்தனர். அதேபோல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் சில பகுதிகள் வெள்ளக் காடானது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கோடை காலத்தில் கிராமங்களில் உள்ள நீர் நிலைகளையும், வடிகால் வாய்க்கால்களையும் சரியாக தூர்வாராமல் விட்டதே தங்களது நெற்பயிர்கள் நீரில் மூழ்குவதற்கு காரணம்என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பேசும் திருவாரூர் விவசாயிகள், “நாங்கள் சம்பா, தாளடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வந்தோம். தற்போது பெய்த கனமழையால் பயிரிட்டு இருபது நாட்களே ஆன எங்கள் நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி விட்டன. இதனால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது” என வருத்தம் தெரிவித்தனர்.
அதேபோல் கோடை காலத்தில் நீர்நிலைகளையும் வடிகால்களையும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சரியாக தூர்வாரவில்லை. அதனால் தான் வயல்களில் மழை நீர் சூழ்ந்து, நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள பெரும்பாலான வடிகால் வாய்க்கால் அனைத்தும் தற்போது வரை, தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகள் மண்டியும், புதர் மண்டியும் தான் கிடக்கின்றன.
மேலும் படிக்க: