கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் மரவள்ளி, மஞ்சள், கருணை மற்றும் சேனைக் கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய், கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும், நெல், கரும்பு, வேர்க்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிரிட்டு வருகின்றனர். இதுதவிர மாம்பழம், முருங்கை, பப்பாளி உள்ளிட்டவைகளையும் பயிரிட்டுள்ளனர்.
முழு கொள்ளளவு
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால், மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 335 ஏரிகளில் 299 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 சதவீதத்திற்கு மேல் 29 ஏரிகளிலும், 51 சதவீதத்திற்கு மேல் 7 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது. மேலும், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் நவம்பர் மாத தொடக்கத்திலேயே முழு கொள்ளளவை எட்டியது.
தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து இருந்ததால் 2 அணைகளில் இருந்தும் ஆறுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் உள்ள பிரிவு வாய்க்கால் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றன.
33 சதவீத பரப்பு (33% Area)
பெரும்பாலான கிராமங்களில் ஏரி உபரி நீர் குடியிருப்புகளிலும் விளை நிலங்களிலும் புகுந்து தேங்கியது. வடிகால் வசதியின்றி பயிர்கள் அழுகின. மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, மஞ்சள், நெல், கரும்பு பயிர்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகி வீணானது. இதில் மரவள்ளி, மஞ்சள் பயிர்கள் அறுவடைக்கு (Harvest) தயாராக இருந்த நிலையில், சேதமானதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
சேதமடைந்த பயிர்களை பார்வையிடச் செல்லும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், ஒரு எக்டேரில் 33 சதவீத பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்திருந்தால் மட்டுமே, சேதமடைந்த பகுதியாக கணக்கெடுக்கப்படும் என கூறுகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதனால், தங்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்தது போல, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணத் தொகையை ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
வடிகால் வசதியின்மையால் மழையில் மூழ்கிய பயிர்கள்: விழிக்குமா அரசு!