ஐநா சபை அறிவிப்பு
நியூஸிலாந்தில் தான் முதன் முதலில் புத்தாண்டான 2020 ஆம் ஆண்டு பிறந்தது . புத்தாண்டை ஒவ்வொரு நாடும் பல்வேறு கொண்டாட்டங்கள், வானை வண்ணமயமாக்கிய வானவேடிக்கைகள், இனிப்புகள், பிரார்த்தனைகளோடு வரவேற்று கொண்டாடி மகிழ்கின்றனர். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை இந்த ஆண்டை தாவர நலனுக்கான பன்னாட்டு ஆண்டாக அறிவித்து இருக்கிறது.
அறிவிப்பின் காரணம்
சர்வதேச அளவில் தாவர உற்பத்தியில் ஆண்டுதோறும் 40 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. நோய்த் தாக்குதலால் மட்டும் ஆண்டொன்றுக்கு 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பையும், பூச்சிகளின் தாக்குதலில் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதார இழப்பையும் சர்வதேச சமூகம் சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான் தாவர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காக இந்த ஆண்டு தாவர நலனுக்கான பன்னாட்டு ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இலக்குகள்
தாவர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி அதன்மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது அனைவருக்குமான உணவு இருப்பை உறுதி செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பது, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது போன்ற நோக்கங்களுக்காக இந்த ஆண்டை தாவர நலனுக்கான பன்னாட்டு அறிவித்து பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்க கோரியிருக்கிறது ஐநா சபை. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச தாவர பாதுகாப்பு மாநாட்டு செயலகம் ஆகிய அமைப்புகள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றன. இந்த ஆண்டு முழுவதும் பல கருத்தரங்குகள், கண்காட்சிகள், விவாத அரங்குகள் மற்றும் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
பின்னணி
பின்லாந்து தான் முதன்முதலில் இந்த ஆண்டை தாவர நலனுக்கான பன்னாட்டு ஆண்டாக அறிவிக்க கோரிக்கை வைத்தது. தாவரங்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் இதர குடியேற்ற நடைமுறைகள் தேவையில்லை.எனவே, இவை ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாடுகளுக்கு எளிதாக சென்று விடுகின்றன. எனவே, இவற்றை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையே கூட்டு முயற்சி தேவை என வலியுறுத்தியது, பின்லாந்து. இதை ஏற்று தான் ஐநா சபை இந்த ஆண்டை தாவர நலனுக்கான பன்னாட்டு ஆண்டாக அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டும் அடுத்த ஆண்டும்
இதேபோல கடந்த ஆண்டை (2019) பிராந்திய மொழிகளுக்கான பன்னாட்டு ஆண்டாகவும், வேதியியல் கூறுகளின் கால அட்டவணைக்கான பன்னாட்டு ஆண்டாகவும், சமாதானத்திற்கான பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்து பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது. எதிர்வரக் கூடிய 2021 ஆம் ஆண்டை காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான பன்னாட்டு ஆண்டாகவும், அமைதி மற்றும் நம்பகத்தன்மைக்கான பன்னாட்டு ஆண்டாகவும், பொருளாதார வளம் மற்றும் அனைவருக்குமான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்திருக்கிறது ஐநா பொதுச் சபை.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07