கிரிஷி உதான் திட்டத்தின் கீழ் மேலும் 21 விமான நிலையங்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என G20 விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடகிழக்கு, மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் விளையும் விவசாய விளைபொருட்களை வேகமாக சந்தைப்படுத்தும் நோக்கில் க்ரிஷி உதான் திட்டத்தின் கீழ் மேலும் 21 விமான நிலையங்களை விரைவில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது "கிரிஷி உதான் திட்டத்தின் கீழ் குறைந்தது 31 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனிடையே மேலும் 21 விமான நிலையங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பேசி வருகிறோம்" என முதல் G20 விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தின் இரண்டாவது நாள் விவாதங்கள் குறித்து செய்தியாளர்களிடம் சிந்தியா கூறினார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில் ,
க்ரிஷி உதான் திட்டத்தின் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து எலுமிச்சை, பலாப்பழம், திராட்சை போன்ற பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி ஜெர்மனி, இங்கிலாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
அக்டோபர் 2021 இல் தொடங்கப்பட்ட க்ரிஷி உதான் திட்டம் 2.0 இன் கீழ் வடகிழக்கு, மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் இருந்து அழிந்துப்போகும் விவசாய விளைபொருட்களின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சரக்கு விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணம், பார்க்கிங் கட்டணம், முனைய வழி செல்லுதல் ஆகியவற்றிற்கான கட்டணத்தில் தள்ளுபடி வழங்கியுள்ளது.
விவசாயத்துறையில் ட்ரோன்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்:
பயிர் விதைப்பு, ஆய்வுகள் மற்றும் பிற பகுதிகளில் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதைத் தாண்டி ட்ரோன்களின் பயன்பாடு விவசாயத் துறையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் 2021 இல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ட்ரோன்களின் வணிக பயன்பாட்டிற்கு தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குவதற்கான விதிமுறைகளை அறிவித்தது.அதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களால் ட்ரோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான PLI திட்டத்தை அறிமுகப்படுத்தி, ட்ரோன் விதிகளின் நோக்கத்தை அரசாங்கம் தாராளமாக்கியது.தொழில்துறை மதிப்பீடுகளின்படி, நாட்டில் விவசாய நோக்கங்களுக்காக 1,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த ஓராண்டில் விவசாய பயன்பாட்டுக்காக சுமார் 3,000 ஆளில்லா விமானங்கள் செயல்படும். பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து பயன்பாட்டில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுச் செலவில் சுமார் 20% வரை சேமிப்பதுடன், கைமுறையாக உரம், பூச்சிகொல்லி மருந்துகளை தெளிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் குறைப்பதாகவும் அறிக்கைகள் உள்ளன.
விவசாயம் தொடர்பான G20 கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, நிலையான விவசாயம், காலநிலை அணுகுமுறை, உணவு விநியோக அமைப்பு மற்றும் விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றின் அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டன.
மேலும் படிக்க :
TNAU சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான பயிா் ரகங்கள் என்ன?
2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்