தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி (College Student) போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்லூரி மாணவி வெற்றி
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஸாருகலா (Charukala) கோவை நேஷனல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் (Engineering) படித்து இந்த ஆண்டு முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.
திருநெல்வேலியில் 90 வயதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மூதாட்டி ஒருவர். மகிழ்ச்சியில் மூதாட்டியை தோளில் சுமந்து ஆதரவாளர்கள் ஊஞ்சலாடினர்.
மூதாட்டி வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். நேற்று வெளியான தேர்தல் முடிவில் பெருமாத்தாள் 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் மூதாட்டி டெபாசிட் (Deposit) இழக்க செய்தார். பெருமாத்தாளின் மகன் கே.எஸ்.தங்கபாண்டியன், இதுவரை தொடர்ந்து 4 முறை சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இந்த முறை சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தங்கபாண்டியன், கீழநத்தம் ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமக்கு பதிலாக தமது தாயாரை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் தங்கபாண்டியன்.
மேலும் படிக்க
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்
120 மொழிகளில் தொடர்ந்து பாடிய கேரள மாணவி: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!