மகாராஷ்டிராவில் உள்ள விரைவுச் சாலையில் இன்று அதிகாலை பேருந்து தீப்பிடித்ததில் அதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் பலத்த தீக்காயமடைந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் சுமார் 33 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமுருத்தி-மஹாமார்க் விரைவுச் சாலையில் அதிகாலை 1.30 மணியளவில் இக்கொடூர விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டயர் வெடித்தது தான் விபத்திற்கு காரணமா?
புல்தானா மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய பேருந்தின் ஓட்டுநர், டயர் வெடித்ததால் பேருந்து மின்கம்பத்தில் மோதியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபத்து நடந்த நேரம் நள்ளிரவு சமயம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். விபத்து நடந்த அதிர்ச்சியில் மீள்வதற்குள் பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் யாரும் வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்தானா காவல் கண்காணிப்பாளர் சுனில் கடசனே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. "இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும்" காவல் கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்து உள்ளார். ஒரே பேருந்தில் பயணித்த 25 பேர் உடல் கருகி இறந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பாராத இவ்விபத்தினால் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க அறிவுறுத்தியும், காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிவிட்டதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாவிட்டால் டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலையில் ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்ட பட்னாவிஸ், "இந்த அமைப்பு வாகனங்களின் வேகத்தை சரிபார்த்து அவர்களை எச்சரிக்கும். இத்திட்டம் நடைமுறைக்கு வர சில மாதம் ஆகும் நிலையில், அதுவரை இரவு நேரங்களில் விபத்துகளை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்," எனவும் தெரிவித்துள்ளார்.
pic courtesy: ANI/twitter
மேலும் காண்க: