மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, 258.06 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தனி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இவ்வாலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் அலகுகளான பேருந்துகள் இயக்கம், ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உட்பட பணியாளர்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, மகளிர் கட்டணமில்லா பயணம், ஓட்டுநர்கள் நடத்துநர்கள் பயணிகளை அணுகும் முறை, பேருந்துகளின் பராமரிப்பு, தூய்மை, தினசரி வருவாய் இழப்பு, விபத்துகள், பயணச் சீட்டுக் கட்டணம் தவிர்த்து இதர வருவாய், நவீன தொழில்நுட்பங்கள் அமலாக்கம், 14-வது ஊதிய ஒப்பந்த அமலாக்கம், தொழிலாளர்களின் நலன், கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட செயல்திறன் முன்னேற்றம், பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட அலகுகளை ஒவ்வொரு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் விரிவாக விளக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக 8 மேலாண் இயக்குநர்களும் மேற்படி பொருள் குறித்து விவரித்தார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கட்டணமில்லா பயண வசதியினை திருநங்கைகளுக்கு விரிவுப்படுத்தியதன் வாயிலாக 14.75 பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகளிரின் பேருந்து பயணப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் "நிர்பயா" திட்டத்தின் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கேமராக்கள் மற்றும் அவசரக்கால பொத்தான்கள் பொருத்தப்பட்டு, 2,500 பேருந்துகள் மற்றும் 66 பேருந்து முனையங்கள் / பணிமனைகள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.
07.05.2021-க்கு முன் 409 வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட 510 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. மேலும், 206 வழித்தடங்கள் நீடிக்கப்பட்டு, 260 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 352 நடத்துனர் இல்லா பேருந்துகள் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது. சென்னையில் பொதுப் போக்குவரத்தினை ஒருங்கிணைக்க மெட்ரோ ரயில் நிலையத்தினை இணைத்திட ஏதுவாக 30 வழித் தடங்களில் 56 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இரு ஆண்டுகளில் 1,312 கிராமங்கள் உட்பட புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாதத்தில் ஒரு நாள் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும், பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்து வருகின்றனர் என்றார்.
மேலும் காண்க:
தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்து புகார் தெரிவிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு