மூன்று வேளாண் சட்டங்களையும் திருப்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுக் கொடுத்து விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறி உள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை (3 Agri Bills) ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு 10 முறைகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகள் கோரும் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்றும் மத்திய அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகளோ மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
மத்திய அரசு இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விவசாயிகளிடம் சொல்லி இருக்கின்றோம். மூன்று வேளாண் சட்டங்களையும் திருப்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுக் கொடுத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம் என வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
வேளாண் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் யுத்வீர் சிங் கூறும் போது,
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் தான் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum source price) குறித்து அரசாங்கம் பேசவில்லை. அரசாங்கம் எப்போதும் சட்டங்களில் திருத்தம் பற்றி பேசுகிறது. இருப்பினும், அவர்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து அவர்கள் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.
ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் மகாசங்கின் தேசியத் தலைவர் சிவ்குமார் கக்கா இது குறித்து கூறும் போது, எந்தவொரு முன் நிபந்தனையின் கீழும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள்.
கடந்த ஏழு மாதங்களில் நாங்கள் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகளை இழந்துவிட்டோம், அவர்கள் (அரசாங்கம்) இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரச் சொல்கிறார்கள்.
அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதத்துடன் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கினால், நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடுகளுக்கு திரும்புவோம் என்று கக்கா கூறினார்.
மேலும் படிக்க
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்!
உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு! விவசாயிகள் கவலை!