News

Thursday, 13 May 2021 08:08 PM , by: R. Balakrishnan

Credit : Dainamani

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் (Subsidy) வழங்கப்படும் என்றும், மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா (Corona) நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் (Oxygen) கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை மே 11 அன்று நடத்தினார்.

அக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது:

1. ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% மூலதன மானியம், இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் 2021, ஆகஸ்ட் 15-க்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். 2021 ஜனவரி 1, 2021 முதல் ஆகஸ்ட் 31, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளும் (Investment) இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க ஜனவரி 1, 2021 முதல் நவம்பர் 30, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30% மூலதன மானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நிறுவனங்கள் 30.11.2021-க்கு முன்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

3. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு 6% வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.

4. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட் / சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

5. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்

6. கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும்.

4 பேர் கொண்ட குழு

தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை (Oxygen) மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துவதற்காக, தமிழக அரசு உத்தரவின் பேரில் தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை எந்த மருத்துவமனைக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த குழு முடிவு செய்யும் என்றும் தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதாரத்துறையால் அமைக்கப்பட்ட ‘வார் ரூம்’ எனப்படும் கட்டளை மையத்துடன் இணைந்து இந்த குழு செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)