தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சுமார் 30 சதவீத மாணவர் தொடர் விடுமுறையில் இருப்பதால் பள்ளிக் கல்வித்துறை புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த மாணவர்கள் தங்கள் கல்வித் தொடர வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களா? அல்லது வேலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அதிகாரிகள்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எஞ்சிய வகுப்பினருக்கு வீட்டுப் பாடங்கள் மட்டும் அளிக்கப்பட்டன.
30% மாணவர்கள்
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதுக் கட்டாமில்லை என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது ஷிப்ட் முறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வழக்கமான நேரத்தில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கோவை மாவட்டத்தில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவது, 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின் மூலம் விவரம் தெரியவந்துள்ளது.
இதுபற்றி தகவலறிந்த பள்ளிக் கல்வித்துறை பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒருவேளை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்களோ என்ற கோணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளது. அதிலும் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் பள்ளிக்கு வருகை புரியவில்லை என்ற தகவல் பெரிதும் அதிர்ச்சியூட்டுகிறது. இதையடுத்து விடுப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் பேசி வருகின்றனர்.
உடனடியாக பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்களை நேரில் சென்று சந்தித்து பேசியும் வருகின்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க தயக்கம் காட்டுகின்றனர்.
ஊர் சுற்றும் மாணவர்கள்
தற்போது நோயின் தாக்கம் குறைந்த நிலையிலும் அந்த தயக்கம் இன்னும் குறையவில்லை. திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். சில மாணவர்கள் பெற்றோர்களை ஏமாற்றி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பிள்ளைகள் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க...