மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் ) வரை மொத்தம் 354 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 328.4 மில்லி மீட்டரை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான அறிக்கையினை சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.10.2023 முதல் 07.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: (01.10.2023) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(02.10.2023): தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: (01.10.2023) மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். (02.10.2023): மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: (01.10.2023) கர்நாடக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
Read more:
2000 ரூபாய் நோட்டு: கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு சான்ஸ் தந்த RBI
தாறுமாறாக உயர்த்தப்பட்ட சிலிண்டரின் விலை- இன்று முதல் புதிய விலை அமல்!