பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெண் கல்வி (Female education)
பெண் குழுந்தைகளின் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் இடைநிற்றலைத் தடுக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தப் பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை (Scholarship)
2020-21ஆம் கல்வியாண்டில் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
அதில், 16 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி போடப்பட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு (Allocation of funds)
இதேபோல் 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 898 கிராமப்புற மாணவிகளுக்கு பட்ஜெட் மதிப்பீட்டின் படி 16 கோடியே 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் 16 கோடியே 55 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர்கள் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுதி (Qualification)
இந்தக்கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை வழங்க ஏதுவாக ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகளில் (SCB) பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியல் இணைப்பு (List link)
மேலும் மாவட்ட வாரியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ள கல்வி உதவித்தொகை குறித்த பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு நிதி சென்றடைந்து, அதன்பிறகு படிப்படியாக பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கடற்கரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!