News

Tuesday, 12 March 2024 03:58 PM , by: Muthukrishnan Murugan

4 percent increase in Dearness allowances

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவிதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவிதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து சம்பளம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த மார்ச் 7 ஆம் தேதி வியாழன் அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு பச்சைக்கொடி காட்டியது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்த டிஏ, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உள்ளது. மேலும், போக்குவரத்து, பிரதிநிதித்துவம் மற்றும் உணவு விடுதிக்கான கொடுப்பனவுகள் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவால் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டது.

அகவிலைப்படி- முதல்வரின் அறிவிப்பு விவரம்:

இதுத்தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு- “ மக்கள் நிலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 46 சதவிதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவிதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01 2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும் பட்சத்தில் அரசின் விதிகளின் படி, அடுத்த அமர்வின் போது மொத்த அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) குறைக்கப்படும். 50 சதவீதமாக அகவிலைப்படி இருந்தால் (DA Hike), அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி பணம் சேர்க்கப்படும் என்ற விதி அமலாகும். இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்

பட்டுப் புழு வளர்ப்பு- 3 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியம்! முழு விவரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)