மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் அதிகப்பட்சமாக 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தொடரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு 7 ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் இரண்டு தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தென்மண்டல வானிலை இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
அதிகபட்ச வெப்பநிலை :
05.06.2023 மற்றும் 06.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகப்பட்சமாக கரூர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ளதா?
05.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.06.2023 முதல் 09.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
pic courtesy: DNA
மேலும் காண்க:
2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு- அமைச்சர் சொன்ன தகவல்!