பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூபாய். 110 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக தமிழக தமிழக வேளாண் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் அல்லாதோர் பலர் இந்த திட்டத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிசான் திட்டத்தில் முறைகேடு இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போது, விவசாயிகளே நேரடியாக பதிவு செய்து கொள்ளும் வகையிலான நடைமுறை தற்போது உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டுள்னர். விவசாயிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் பணிக்காக அதிகாரிகள் பயன்படுத்தும் கடவுச்சொல்லை, சிலர் முறைகேடாகப் பெற்றுள்ளனர்.
6 லட்சம் பயனாளிகள் சேர்ப்பு
அதைப் பயன்படுத்தி, சில இடைத்தரகர்களும், தனியார் கணினி மையங்களும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கிசான் திட்டத்தில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்ணுள்ளனர். சிலர் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய பாஸ்வேர்ட்டை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது.
இந்த குறித்து விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 32 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்பிக்க முடியாது. மோசடியில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ககன்தீப்சிங் பேடி கூறினார்.
மேலும் படிக்க..
வரும் நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!
பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை