திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் காஜாமலை பகுதியில் சாலை ஓரமாக உள்ள கடை ஒன்றில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. மலிவு விலையில் விதவிதமான உணவுகள் கிடைப்பதால் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி, ஈவெரா கல்லூரி என சுற்றுப்புற கல்லூரி மாணவர்களும், கூலி தொழிலாளிகளும், சாமானிய மக்களும் இந்த கடையை மொய்த்து வருகின்றனர்.
தினந்தோறும் எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், கத்திரிக்காய் சாதம், சாம்பார் சாதம், ஒரு புரோட்டா ஐந்து ரூபாய் என விதவிதமான உணவுகளை 5 ரூபாய்க்கு தருகிறோம். இதுமட்டுமல்லாமல் சிக்கன் பிரியாணி ஒரு பிளேட் 30 ரூபாய்க்கு தருகிறோம்.. விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் எங்களை தேடி வருகின்றனர்.
இந்த கடையை தொடங்கியபோது, முதலில் 30 ரூபாய்க்கு வெரைட்டி சாதம் வழங்கி வந்தோம். எங்கள் கடைக்கு சாப்பிட வருகை தரும் கல்லூரி மாணவர்கள் பலர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதை பேச்சுவாக்கில் தெரிந்து கொண்டோம். இதுபோன்ற மாணவர்களுக்காகவும், ஆதரவற்று இருக்கும் முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது அதனால்தான் ஐந்து ரூபாய்க்கு ஒரு சாதம் என விலையை நிர்ணயித்து தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இதனால் பல ஏழை எளிய மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் கூலித் தொழிலாளர்களும் அதிக அளவில் எங்களிடம் உணவு சாப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக தினந்தோறும் எங்களால் முடிந்த அளவிற்கு தினந்தோறும் 50 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம்.
ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கினால் உங்களுக்கு எப்படி கட்டுப்படியாகுது என பலர் கேட்கிறார்கள். இதில் லாபம் கிடைக்குதோ இல்லையோ மனநிறைவு கிடைக்கிறது. எங்களால் கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல பேர் வயிறு நிறைய உணவு சாப்பிடுகிறார்கள். அது ஒன்றே எங்களுக்கு போதும் பெரிதாக லாபம் எதிர்பார்க்கவில்லை எங்களால் முடிந்த வரை உணவுகளை குறைந்த விலையில் வழங்கி வருவோம் என புஷ்பராணி தெரிவித்தார்.
மேலும் படிக்க:
செம்ம நியூஸ்: தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறையா? ஆனால் யாருக்கு?