அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு 600 ஊராட்சிகளில் ‘கிராம செயலகங்கள்’ கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை உள்ளாட்சிகள் தினம் என கொண்டாட வேண்டும் என்று நான் துணை முதல்வராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2007 நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்பட்டது.
உள்ளாட்சி தினம் (Local Day)
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவ.1-ம் தேதி ‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும். இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் ஜன.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம்,ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்.2காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவ.1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
கிராம சபை கூட்டம் (Village Council Meeting)
மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வுப் படி தொகை 10 மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு 5 மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் தமிழகத்தில் 1.19 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
எங்களது ஆட்சியில் தான் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ என்ற விருது வழங்கப்பட்டது. 10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம், ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு முதல் ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ விருது வழங்கப்படும். மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும்.
அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த, முதல்கட்டமாக 600ஊராட்சிகளில் தலா ரூ.40 லட்சத்தில் ‘கிராம செயலகங்கள்’ இந்த ஆண்டே கட்டப்படும். இதில், ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்து துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, இணையதள வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.
மேலும் படிக்க
தூய்மைப் பணியாளர்களை காக்குமா தமிழக அரசு: விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற ஸ்மார்ட் அட்டை அவசியம்!