மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் 61 நாள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்றதால், கடலோர டெல்டா பகுதியின் கரையோரங்கள் இன்று அதிக உற்சாகத்துடனும், கொண்டாட்டம் மிகுந்த இடமாகவும் காட்சியளித்தன.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இருந்து வங்காள விரிகுடாவில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட ஆண்டுத் தடை உத்தரவு நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
இரண்டு மாத கால தடை காலத்தை மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கவும், தங்கள் கப்பல்களில் பழுது மற்றும் வர்ணம் பூசும் வேலைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர். புதன் கிழமை மாலை கோயில்களில் மீண்டும் தொடங்கும் மீன்பிடித்தொழிலில் நல்ல லாபம் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
எதிர்காலத்தில் மீன் வளத்தைப் பாதுகாப்போம் என்றும் இலங்கையுடன் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படாது என்றும் நம்புகிறோம் என அக்கரைப்பேட்டை மீனவப் பிரதிநிதி எம்.கணேசன் தெரிவித்தார். முன்னதாக கடலுக்குச் செல்ல விரும்பும் மீனவர்கள் தடைக் காலத்தை மீறாமல் இருக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் திறக்கப்பட்டதையடுத்து தங்களது முதல் மீன்பிடி சீசனில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தரங்கம்பாடி மீனவ பிரதிநிதி பி.ராஜேந்திரன் தெரிவிக்கையில் "எங்கள் புதிய மீன்பிடி துறைமுகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் துறைமுகம் வர்த்தக மையமாகவும் செயல்படத் தொடங்கும்,'' என்று நம்பிக்கைத் தெரிவித்தார். நம்பியார் நகர் பிரதிநிதி எஸ்.தங்கவேல் கூறுகையில், ”பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட புதிய துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வோம். நல்ல லாபம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.
கடந்த 2 மாதங்களாக நிலவிய மீன்பிடித் தடைக்காலத்தினால், மீன் சந்தையில் மீன்களின் வரத்து குறைந்தது. பல வகையான மீன்கள் சந்தையில் கிடைக்காத நிலையில் விலையும் கணிசமாக உயர்ந்து விற்பனை ஆனது.
தற்போது மீண்டும் மீன்பிடித் தொழில் களைக்கட்டத் தொடங்கியுள்ளதால், சந்தைகளில் பல்வேறு வகையான மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மீன்களின் விலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
செந்தில்பாலாஜியின் துறை மிஸ்டர்-க்ளீன் அமைச்சரிடம் ஒப்படைப்பு- முழு விவரம்