தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் (Local body elections)
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை, 2 கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இதன்படி, அக்டோர் 6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு (1st phase Voting)
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் உற்சாகமாக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.
சிறப்பு ஏற்பாடு (Special arrangement)
மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட அனைத்து ஓட்டுச்சாவடிகளும், 'சிசிடிவி' வாயிலாகக் கண்காணிக்கப்படுகின்றன.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து 'ஆன்லைன்' வாயிலாக ஓட்டுச்சாவடிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் (Security arrangements)
வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட தேர்தல் பாதுகாப்புப் பணியில், சுமார் 17 ஆயிரத்து 130 போலீசாரும், 3,405 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போதைக்குத் தேர்தல் இல்லை -அதிரடி அறிவிப்பு!