முதன்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவினை (PMFBY) செயல்படுத்தும் முன்னணி நிறுவனத்தில் ஒன்று தான் “அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்” (AIC- Agriculture Insurance Company of India Limited). விவசாயத்துறையில் காப்பீடு வழங்கும் தனது செயல்பாடுகளை மீன் வளத்துறைக்கும் விரிவாக்கியுள்ளது AIC.
இந்தியப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் 3-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகவும் மற்றும் 2-வது பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
1.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இறால் வளர்ப்பு நடைப்பெறுகிறது. இவற்றின் அடிப்படையில் 7.37% என்ற சராசரி வளர்ச்சி விகிதத்துடன் மீன் வளர்ப்புத் தொழில்துறையில் இறால் வளர்ப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் மூலம் சுமார் ரூ. 43,000 கோடி அந்நியச் செலாவணியைப் பெறுகிறது.
விவசாய பணியில் ஈடுப்பட்டிருக்கும் நபர்களைப் போலவே, மீன்வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் மற்றும் மீன்களை தாக்கும் நோய்களால் வருவாய் இழப்பை சந்திக்கின்றன. தொடர்ந்து வரும் காலநிலை மாற்ற அபாயங்கள் மற்றும் பிற சமூக-பொருளாதார தொழில்நுட்ப சவால்களால் தொடர்ந்து மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்.
இவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க நிலையான காப்பீட்டுத் திட்டம் வேண்டும் என விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் AIC நிறுவனம் ஒரு புதிய காப்பீட்டுத் திட்டமாக "இறால் காப்பீடு" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் இறால் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை உள்ளடக்கி இத்திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த செப்.14 ஆம் தேதி குஜராத்தில் உள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இறால் விவசாயிகள் மாநாடு 2023 நடைப்பெற்றது. AIC- இன் “இறால் காப்பீடு” திட்டத்தினை ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், AIC இன் CMD, ஸ்ரீமதி. கிரிஜா சுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், சிபிஏ மற்றும் விவசாயிகள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இறால் வளர்ப்பினை போன்று மற்ற மீன் வளர்ப்புக்கும் மேலும் அனைத்து மாநிலங்களிலும் மீன் வளர்ப்புக்கான காப்பீடு திட்டத்தினை விரிவுப்படுத்த AIC திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
விநாயகர் சதுர்த்தி- இப்படியெல்லாம் பண்ணாதீங்க! ஆர்டர் போட்ட TNPCB