உலகில் சக மனிதர்களை நேசிப்பதைப் போலவே விலங்குகள் மீது தனிப்பிரியம் கொண்ட நபர்களும் பலர் உள்ளார்கள். இந்த விலங்கு பிரியர்கள் செல்லப் பிராணிகளை வளர்த்து அதை சீராட்டி கவனிப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஜப்பான் நாட்டில் ஒரு விலங்கு பிரியர் ஒருவர் வித்தியாசமான செயலில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் Zeppet என்ற ஆடை அலங்கார நிறுவனம் உள்ளது. பெயர் வெளியே கூற விரும்பாத ஒரு வாடிக்கையாளர் ஒருவர் இந்த நிறுவனத்தின் ஸ்டூடியோவுக்கு வந்து தன்னை ஓநாய் போல மாற்றி அலங்காரம் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். இவரின் கோரிக்கையை கேட்டு சற்று திகைத்து போனாலும் அந்த நிறுவனம், சரி நீங்கள் கேட்டதை செய்து தருகிறோம், ஆனால் செலவு தான் ஜாஸ்தி ஆகும் என்றுள்ளது. தனது ஆசையை நிறைவேற்ற எவ்வளவு செலவு ஆனாலும் ஓகே என்று சம்மதம் தெரிவித்துள்ளார் அந்த நபர்.
இதையடுத்து அந்த நபரை ஓநாய்யாக உருமாற்றும் வேலைகளை செய்யத் தொடங்கிய அந்நிறுவனம், அவரின் உருவத்தை அளவெடுத்து அதற்கு ஏற்ப உடைகளை வடிவமைத்து தந்துள்ளது. பல முறை டிசைன்களை மாற்றி இறுதியாக அவருக்கு கன கச்சிதமாக பொருந்தும் விதத்தில் ஓநாய் உடையை அவர் மீது பொருத்தியது. அதை போட்ட பின் அந்த நபர் அச்சு அசலாக ஓநாய் போலவே தென்பட்டார்.
தனது பின்னங்கால்களை தூக்கி சிறிது தூரம் ஓநாய் போலவே நடந்து காட்டி போட்டோக்களை எடுத்துக்கொண்டார். இவர் ஓநாய் கெட்டப்பில் இருக்கும் போட்டோக்களை அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்ப்பவர்கள் எல்லாம் இது மனிதன் போன்றே தெரியவில்லை உண்மையாக ஒரு ஓநாய் தான் நிற்பது போல தோன்றுகிறது என்று தெரிவிக்கின்றனர். இதற்காக இவர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.18.5 லட்சம் செலவு செய்துள்ளார். ஆனால் தனக்கு நேர்ந்த செலவை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை. தனது நீண்ட கால ஆசை நிறைவேறியது எனக்கு போதும் என்கிறார் பூரிப்புடன்.
மேலும் படிக்க: