பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க அரசுக்கு நீண்ட காலமாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அரசு செவி சாய்த்தப்பாடில்லை. இதனிடையே விரைவில் அரசாங்கம் தங்கள் கோரிக்கையினை ஏற்று வேளாண் கல்லூரி அமைக்க முன்வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள் வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.
பெரம்பலூர் முழுவதும் பல ஆண்டுகளாக மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் சாகுபடி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக சின்ன வெங்காயம் சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது பெரம்பலூர் மாவட்டம்.
பெரம்பலூர் அனைத்து பருவ காலங்களிலும் விவசாயம் நிறைந்த மாவட்டம். மாவட்டம் முழுவதும் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம், நெல், கரும்பு ஆகியவை பருவத்தைப் பொறுத்து சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காய சாகுபடியில் முன்னிலையில் இருப்பது போல், மாநில அளவில் பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையம் இங்குள்ள விவசாயிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. ஆனால், அரசு வேளாண்மை கல்லூரி இல்லாதது ஒரு குறையாகவே இன்றளவும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை அளித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், ‘‘இந்த மாவட்டத்தில் அனைத்து வகையான விவசாயப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு அரசு வேளாண் கல்லூரி இல்லை. இங்கு இரண்டு தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. மக்காச்சோளம், வெங்காயம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் அடிக்கடி பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பின்னர் வெளி மாவட்ட ஆராய்ச்சியாளர்கள் வந்து இதை ஆய்வு செய்கின்றனர். இங்கு வேளாண் கல்லூரி இருந்தால் பயிர் சேதத்தை விரைவாக சரி செய்ய முடியும். இதுபோன்ற கல்லூரிகளால் விவசாயிகள், மாணவர்கள் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பெரம்பலூர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கடைசி நேரத்தில் தான் கிடைக்கும். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே, இம்மாவட்டத்துக்கு உடனடியாக வேளாண் கல்லுாரியை கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
திருச்சி மாவட்டம் குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்ரி இன்ஜினியரிங் படித்த பெரம்பலூரைச் சேர்ந்த ஆர்.படைக்காத்து என்பவர் கூறுகையில், ''தனியார் விவசாயக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. பெரம்பலூரில் இருந்து குமுளூர் வேளாண்மைக் கல்லூரிக்கு செல்ல குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். நீண்ட நேரம் பயணம் செய்வதால் பெரம்பலூர் பகுதி மக்களுக்கு வசதியாக இல்லை.
இங்கிருந்து ஏராளமான மாணவர்கள் காரைக்குடி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் தங்கி படிக்கின்றனர். இங்கு கல்லுாரி வந்தால், மாணவர்களுடன், விவசாயிகளும் பயனடைவார்கள்,'' என்றார்.
பெரம்பலூர் தொகுதி MLA எம்.பிரபாகரன் தெரிவிக்கையில், ''இது குறித்து அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
நீடித்த நிலையான பருத்தி இயக்கம்- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு