இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு சென்ற அவர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்று நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்குகினார்.
மேலும் ரூ.98 கோடியே 77லட்சம் மதிப்பில் முடிவுற்ற 910 பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.894 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 2-ம் உலகப்போர் நினைவாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா ரூ.3.36 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி சந்தையில் ரூ.15.25 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 309 கடைகளையும் முதல்வர் திறந்து வைத்து, மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில், உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர்ப்பங்கீட்டை இடைக்காலத் தீர்ப்பு மூலம் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பெற்று தந்தார் என்பதை குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே ஓமிக்ரான் தொற்று தலைதூக்க துவங்கியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்கலாமா என கருத்து கேட்டேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5,000 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாட்களில், அவர்கள் வீடு தேடி நலத்திட்ட உதவிகள் சென்றடையும்." என கூறினார்.
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், இந்த ஆறு மாத காலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டார்.
தஞ்சையில், குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்ந்திருப்பதையும் அவர் சுட்டிகாட்டினார். மேலும் அவர், தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதே இலக்கு என்றார்.
"நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கான கூலி ரூபாய் 3.25- லிருந்து ரூபாய் 10 ஆக உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் ரூபாய் 83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல் கொண்டு வரும் விவசாயிகள் எந்த புகாரும் கூறாத வகையில், கொள்முதல் நிலைய ஊழியர்களின் பணி தேவை" என அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
கலப்படத்தில் பாலுக்கு பின், தற்போது எண்ணெய் மற்றும் வெல்லமா?