10,11,12 ஆம் வகுப்புகளுக்கானப் பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, விடைத்தாள்கள் திருத்தும்பணி, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதியுடன் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வுகளில் மாணவர்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேநேரம் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணி
இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைகிறது. அதேநேரம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.
முழு மதிப்பெண்
இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள்
இந்தநிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க...