சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜிக்கு தொடர்பான அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறை கடந்த வாரம் சோதனை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை நீதிமன்றம் ஏற்றது. சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
5 மணி நேரமாக நடைப்பெற்ற இருதய அறுவை சிகிச்சை:
அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவதற்கான உடல் தகுதியை, அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றதையடுத்து இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக் குழு இருதய அறுவை சிகிச்சையினை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரமாக நடைப்பெற்ற பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் தற்போது வரை செந்தில்பாலாஜியின் உடல்நிலை தன்மையினால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளது. அதே நேரத்தில், செந்தில்பாலாஜி விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க பொய்யான உடல்நிலை குறைவை காரணம் காட்டுகிறார் என குற்றம்சாட்டியது.
அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டுக்கு நேற்றைய தினம் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். பொய்யான உடல்நிலை குறைபாடு என குற்றம்சாட்டியுள்ள நிலையில், இன்று அமைச்சருக்கு அறுவை சிகிச்சை நடைப்பெற்றுள்ளது. இது அமலாக்கத்துறையின் நடவடிக்கை மீது பல்வேறு கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறையின் கைதினை தொடர்ந்து, அவர் வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டன. அதே வேளையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பட்டியலில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ரேஷன் கார்டுக்கு 2 பழ மரக்கன்று- சரியா வளர்க்கலனா சிக்கல் வேற..