பிரதமர் மோடி மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் தெலுங்கானா விவசாயி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செருப்பு அணியும் காணொளி இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவைச் சேர்ந்த 71 வயதான மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, இவர் ஒரு வித்தியாசமான சபதத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். அது என்னவென்றால் தனது மாநிலத்தில் மஞ்சள் வாரியம் நிறுவப்படும் வரை காலணிகளை கைவிடுவதாக சபதம் செய்திருந்தார்.
படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயி தனது 12 ஆண்டு கால சபதத்தை தற்போது முடித்துக் கொண்டுள்ளார். இதற்கு ஒரே காரணம் பிரதமர் உறுதியளித்த அந்த ஒரு வார்த்தை தான்.
விரைவில் நடைப்பெற உள்ள தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநிலத்துக்குச் சென்றார். தெலுங்கானாவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைக்கும் என்றும், இது தெலுங்கானா மற்றும் நாட்டிலுள்ள மஞ்சள் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
பாலேம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, மஞ்சள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும் வகையில் மஞ்சள் வாரியத்தை நிறுவ வேண்டும் என கடந்த 2011 ஆம் ஆண்டே கோரிக்கை விடுத்தார்.
அதோடு நிற்காமல் நவம்பர் 4, 2011 அன்று, அவர் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள இச்சோடாவிலிருந்து 63 நாள் பாதயாத்திரையைத் தொடங்கி திருப்பதியில் உள்ள வெங்கடேசப் பெருமானின் கோவிலில் நிறைவு செய்தார். அத்தோடு தனது கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் முடிவெடுத்தார்.
மஞ்சள் உணவுப்பொருள் மட்டுமின்றி மருத்துவக் குணம் மிக்கவை. பல ஆயிரம் ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படும் மஞ்சள், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு அவற்றின் மருத்துவ குணம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தற்போது மஞ்சளின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கவும், அதற்கான சந்தை வாய்ப்பினை உருவாக்குவதும் முக்கியம். பிரதமரின் அறிவிப்பானது மஞ்சள் விவசாயிகளே மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்பால், மனோகர் ரெட்டி இறுதியாக தனது செருப்பினை மீண்டும் அணிந்துள்ளார். மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்கிற முடிவுக்கு பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் காண்க:
4 வருடம் பொறுத்தால் 90 ஆண்டு பலன்- அதிகரிக்கும் மூங்கில் சாகுபடி
நெல் மற்றும் தினை விதை சேகரிப்பில் அசத்தும் 7 ஆம் வகுப்பு சிறுமி