தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தென் மேற்கு பருவ காற்று தீவிரம். நீலகிரி, ஊட்டி, சேலம், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வருகிற 17 ஆம் தேதி முதல் கிழக்கிலிருந்து காற்று அதிகம் வீச இருப்பதால் 17, 18 ஆகிய இரு தேதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனீ, ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையாக 38 டிகிரியும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரியும் பதிவாகக் கூடும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.
நேற்றைய நிலவரம் படி நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 9 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாகத்தில் 7 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் அரக்கோணம், திருத்தணி, சோழவரம், திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னகள்ளாரில் 5 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran