கிராம விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட உரம் தயாரிக்கும் முறை மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்துக்காக 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கி களப்பணி ஆற்றி வருகின்றனர்.
உரம் தயாரிக்கும் பயிற்சி
மாணவர் குழுவினர் காவேரிப் பட்டணம் அடுத்த மாணிக்கனூர் விவசாயிகளுக்கு, செறிவூட்டப்பட்ட தொழுஉரம் தயாரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தொழு உரத்தை நேரடியாக பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை செறிவூட்டிய பின்னர் பயன்படுத்தினால் சத்துக்களின் அளவும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவற்றை தயாரிக்க சாண எருவை சமமாக பரப்பிக் கொண்டு அதில் சூப்பர் பாஸ்பேட்டை நன்கு கலந்து உலரவிட வேண்டும். ஒரு டன் சாண எருவுக்கு 150 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை கலக்க வேண்டும். பின்பு அதை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்க வேண்டும். 15 முதல் 30 நாட்களுக்குப் பின்னர் அதனை பயன்படுத்த வேண்டும்.
செறிவூட்டப்பட்ட உரத்தின் பயன்கள்
செறிவூட்டப்பட்ட தொழு உரம் பயன்படுத்துவதால், பயிருக்கு உயிர்ச் சத்துக்களும், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
பூச்சி மேலாண்மை செயல் விளக்கம்
இதனிடையே, நடுப்பையூர் கிராமத்தில், தென்னையில் கருத்தலை புழு தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்கள் குழுவினர் விவசாயிகளிடம் செயல்விளக்கம் அளித்தனர்.
கருத்தலை புழுக்கள் தாக்குதல்
கருத்தலை புழுக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் தென்னை மட்டைகளின் அடிபாகத்தில் அரிக்கப்பட்டு சக்கைகளிலான நீளமான கூண்டுகள் காணப்படும். அதில் புழுக்கள் தென்படும். அவை மட்டைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதால், மட்டைகள் காய்ந்து விடும். இதை தடுக்க, பாதிக்கப்பட்ட ஓலைகள், மட்டைகளை தனியாக எடுத்து எரித்துவிட வேண்டும்.
இளம் மரங்களில் குளோராபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 மி.லி., வீதம் கலந்து, தாக்குதல் அதிகமுள்ள மரங்களின் அடிபாகத்தில் தெளிக்க வேண்டும். காய்ப்பு வந்த மரங்களில் வளர்ந்த வேரை சாய்வாக வெட்டி, அதில் மோனோகுரோடபாஸ் கலவையை பாலிதீன் மூலம் கட்டிவிட வேண்டும். இதன் மூலம் கருத்தலை புழுக்களை கட்டுப்படுத்தலாம் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும் படிக்க..
நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் - வேளாண் பல்கலை,