Agricultural lands that are barren
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் வீட்டு மாடுகளால் விவசாயம் களையிழந்து கேள்விக் குறியாகியுள்ளது. பருவ மழையால் கண்மாய்கள் நிரம்பியும் விவசாயம் செய்ய முடியாத அல்ல நிலை ஏற்பட்டு, நிலங்கள் தரிசாக கிடக்கிறது.
முழு கொள்ளளவு (Full capacity)
ஒன்றியத்தில் மல்லாக்கோட்டை பகுதியில் மணிமுத்தாறில் வந்த வெள்ள நீர் காரணமாக பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. குறிப்பாக 395 ஏக்கர் பரப்புள்ள சித்தமல்லி கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
ஆனால் அக்கண்மாய்க்கு ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 400 ஏக்கர் நிலங்களில் எந்த விவசாயமும் நடக்கவில்லை. விவசாயிகள் தண்ணீர் இருந்தும் நிலங்களை தரிசாகவே போட்டுள்ளனர். இப்பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் வளர்க்கப்படும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மாடுகள் வயல்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுவதால், விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழவுப் பணியை மேற்கொள்ளவில்லை.
மாவட்ட நிர்வாகம் அந்தந்த பகுதி ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலமாக விவசாயத்தை சேதப்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தரிசு நிலங்கள் (Barren Lands)
செ.ராமகிருஷ்ணன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட துணை தலைவர் கூறுகையில், ஜெயங்கொண்டநிலை, மல்லாக்கோட்டை, வடவன்பட்டி, எஸ்.மாம்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாடுகளை வளர்ப்போர் கட்டி வைக்காமல் விவசாய நிலங்களில் விட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் தண்ணீர் இருந்தும் தரிசாக கிடக்கிறது. எனவே மாடுகளை ஒழுங்குபடுத்தி விவசாயத்தை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?