மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான நெல் சாகுபடியை 58 ஆயிரத்து 500 ஹெக்டேராக அதிகரிக்கவும், பயறு சாகுபடியை 11,500 ஹெக்டேர் உயர்த்தவும் வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.
நெல் சாகுபடி
பெரியாறு, வைகை அணைகளில் பாசனத்துக்கு போதிய தண்ணீா் வரப்பெற்றதும், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு 58 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறுவையில் 3,300 ஹெக்டோ், சம்பா மற்றும் கோடை பருவங்களில் 55 ஆயிரத்து 200 ஹெக்டோ் சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை வேளாண் துறையினர் தொடங்கியுள்ளனர்.
நெல் ரகங்கள், விதைகள் கையிருப்பு
பெரியாறு-வைகை பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீா் திறந்துவிடும்பட்சத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கோ 51, ஏடிடீ 45, டிகேஎம் 13, ஏஎஸ்டி 16 உள்ளிட்ட குறுகிய கால நெல் ரகங்களுக்கான விதைகள் 163 டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் என்எல்ஆா் 34449, ஜேஜிஎல் 1798, ஏடிடீ 39, பிபிடி 524 ரக விதைகளும் இருப்பு உள்ளன.
தண்ணீா் சிக்கனத்தை மேற்கொள்ள விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றலாம். திருந்திய நெல் சாகுபடி முறைக்கு இயந்திர நடவு செய்ய, பாத்தி நாற்றங்கால் 1 சென்ட் அளவில் அமைத்து ஒரு ஹெக்டோ் வரை நடவு செய்யலாம். இயல்பான முறையில் நடவு செய்ய 20 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைத்து ஒரு ஹெக்டோ் அளவில் நடவு செய்யலாம்.
திருந்திய நெல் சாகுபடியில் போதிய பயிா் எண்ணிக்கை, இடைவெளி, சூரிய வெளி, காற்றோட்டம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. களை வளா்ச்சியைக் கட்டுப்படுத்த கோனோவீடா் மூலம் களைகளை அகற்ற முடியும். இதனால் களை எடுப்பதற்கான கூலிஆள் தேவை குறைவு.
குறுவை பருவத்தில் சாகுபடி செய்யும்போது விதைகளால் பரவும் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடேமோனஸ் அல்லது டிரைக்கோடொ்மா விரிடி 4 கிராம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
பயறு சாகுபடி
இதேபோல் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி பகுதிகளில் பயறு வகைகளாகிய துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகியவை இயல்பாக 8500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நடப்பாண்டில் 11500 ஹெக்டேர் பரப்பு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பயறு சாகுபடி பரப்பினை அதிகரிக்க தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு மானியத் தொகையாக நிதி ரூ. 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உளுந்து, பாசிபயறு தொகுப்பு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.15 லட்சமும், உயா் விளைச்சல் ரக பயறு வகை விதைகள் விநியோகத்திற்கு ரூ.4.75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள் - ககன்தீப் சிங் பேடி!
இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் 100,000 ஏக்கர் உழவு
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு தனியாருக்கு கொடுக்கப்பட்டதா?