மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ராகுல், காங்கிரஸ்:
நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவம் அடிபணிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே மத்திய அரசு திரும்ப பெறும் என கூறியதையும் நினைவுப்படுத்துகிறேன்.
மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ்:
இது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் படும் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பார்லிமென்டில் இந்த பிரச்னைகளை எழுப்புவோம்.
மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டீல்:
இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் இவ்வளவு விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். அரசாங்கம் முன்னதாகவே பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடியதால், அவர்களின் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இது விவசாயிகளின் வெற்றி.
ஸ்டாலின், தமிழக முதல்வர்:
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!
கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.,:
போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி; தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க அறிவிப்பு.
செம்மலை, அதிமுக:
மூன்று வேளாண் சட்டங்களிலும் தேவையெனில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினோம். விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் அறிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று இன்றைய நாள் வரலாற்றில் குறித்து வைக்கப்படும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் படிக்க
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!