கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என முன்னணி பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலுக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதும் ஓடாமல் இருந்த சர்க்கரை ஆலைகளை சீர்திருத்தம் செய்து அவ்வாலைகளை சிறப்பாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு கரும்புக்கு ரூ.4,000 வழங்குவது என்பது 5 ஆண்டுகளில் நடைமுறைப் படுத்துவது ஆகும். டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்குவதை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிட பல சீரிய முயற்சிகளும் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு-
கரும்பு ஊக்கத்தொகை படிப்படியாக உயர்வு:
கடந்த ஆட்சியில் கரும்புக்கு 2016-17 முதல் 2019-20 முடிய டன்னுக்கு ரூ,2,750 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இவ்வரசு கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, 2020-21 ஆம் ஆண்டில் டன்னுக்கு ரூ.2,900/ மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2,950/ கிடைக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டில் டன்னுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகையினை அறிவித்துள்ளதால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ,3,016.25/- கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர் மகசூல் கரும்பு இரகங்களை ஊக்குவிக்கவும், சர்க்கரை ஆலைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையாக ரூ.250 கோடி அதிகரித்துள்ளது. தற்போது, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரும்பு சாகுபடிப் பரப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 55 ஆயிரம் எக்டர் அதிகரித்துள்ளது. அரசின் அறிவிப்பினால், கரும்பு சாகுபடிப் பரப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசின் அறிவிப்புகளை உதாசீனப்படுத்தும் வகையில் பி.ஆர்.பாண்டியன் கருத்து கூறியுள்ளார். கடும் நிதி நெருக்கடியிலும், கரும்பின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது இவ்வரசின் சாதனையாகும்.
அதே போன்று நெல்லுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் மாநில அரசின் ஊக்க தொகையும் குவிண்டாலுக்கு சன்ன இரகத்துக்கு ரூ.100, பொது இரகத்திற்கு ரூ.75 வழங்கி கொள்முதல் விலை தற்போது, சன்ன இரகத்துக்கு ரூ.2,160 , பொது இரகத்திற்கு ரூ.2,115 கிடைத்து வருகிறது. மேலும் தேவையான இடங்களில் அதிக எண்ணிக்கையில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக, தற்போது நெல் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு நெல்லுக்கு வழங்கப்பட்டுவரும் மாநில அரசின் ஊக்கத்தொகை காரணமாக நெல் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக ரூ.220 கோடியாக இருந்து நெல் ஊக்கத்தொகைக்கான நிதியானது, தற்போது ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தை தவிர்த்து தனியார் வியாபாரிகளிடமிருந்தும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் அதிக விலை கிடைத்து வருவதே அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
அரசின் நிதி நிலைக்கு ஏற்ப பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2023-24ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையினை படித்து பலதரப்பட்ட விவசாயிகளும் அறிஞர்களும் வேளாண்மையில் ஈடுபடும் அனைத்துத்தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
பெரும்பாலான விமர்சனங்கள் பாராட்டும் வகையிலேயே உள்ளதைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், அரசுக்குக் கிடைத்த பாராட்டினை பொறுக்க முடியாமல், வேளாண் பட்ஜெட் பக்கத்துக்கு பக்கம் விமர்சனங்களைத் தான் வர வைத்து இருக்கிறது என்று கூறுவது அரசின் முயற்சியை சோர்வடைய செய்யும் நோக்கத்தில் இருந்தால், அது எந்நாளும் நிறைவேறாது.
பி.ஆர். பாண்டியனுக்கு கண்டனம்:
வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர். பாண்டியன் அவர்கள் வேளாண் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்து விட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே தனக்கென தனி இடம் பெற்றுள்ள பத்திரிக்கைகள் இது போன்று அரசை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை உபயோகிப்பது செய்தி வெளியிடுவதும், ஒருசிலரின் கருத்துக்களை, ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக வெளியிடுவதும் வருந்தத்தக்கதாக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
Block Coordinator காலி பணியிடம்- விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி?