காவிரி விவகாரம் தமிழ்நாடு- கர்நாடகா மாநிலங்கள் இடையே மீண்டும் வெடித்துள்ள நிலையில் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் தான். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவில் நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பிட்டு திட்டத்தில் சேர்க்காத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுத்தொடர்பான அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சரின் பேச்சை நம்பி, சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியுள்ளன என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தனது அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாயை நிவாரண தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும்; கடலூர் மாவட்டம், சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும், அதிமுகவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற வெள்ளிக் கிழமை (6-10-2023) அன்று நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 6 ஆம் தேதி காலை 10 மணியளவில், கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
திருவாரூர் மாவட்டம் - R. காமராஜ், M.L.A., தலைமையிலும், நாகப்பட்டினம் மாவட்டம்- ஓ.எஸ்.மணியன், M.L.A., தலைமையிலும், தஞ்சாவூர் மாவட்டம் (புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா உட்பட) டாக்டர் C.விஜயபாஸ்கர், M.L.A., தலைமையிலும், மயிலாடுதுறை மாவட்டம்- R.B. உதயகுமார், M.L.A., தலைமையிலும், கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான சிதம்பரத்தில்- செ. செம்மலை தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைப்பெறும் எனத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழக விவசாயிகள் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் அதிமுகவும் காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போரட்டத்தில் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டினைப் போன்று கர்நாடக மாநிலத்திலும் விவசாயிகள் மற்றும் அவர்களது ஆதரவு அமைப்புகள் தொடர்பாகவும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. கடந்த வாரம் கூட இரண்டு கட்டமாக கர்நாடகாவில் பந்த் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: