ஏர்டெல் நிறுவனம், '5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிந்த கையோடு, சேவைகளை துவங்குவதற்காக, 'எரிக்ஸன், நோக்கியா, சாம்சங்' ஆகிய நிறுவனங்களுடன், '5ஜி நெட்வொர்க்' ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த மாதத்திலேயே சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிக்ஸன்,நோக்கியா ஆகிய நிறுவனங்களுடன் உறவில் இருப்பதாகவும்; சாம்சங் உடனான கூட்டு, இந்த ஆண்டு முதல் துவங்குவதாகவும், ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் 5ஜி (Airtel 5G)
சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம், 5ஜி ஏலத்தில் பங்கேற்று, 43 ஆயிரத்து, 84 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கி உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது: ஏர்டெல் நிறுவனம், 5ஜி இணைப்பின் முழு பலன்களையும் நுகர்வோருக்கு வழங்கும் வகையில், உலகம் முழுதும் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். 5ஜி சேவையை வழங்குவதற்கான நெட்வொர்க் ஒப்பந்தங்கள் முடிவடைந்து விட்டன.
ஏர்டெல் நிறுவனம், அதன் 5ஜி சேவைகளை, ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்க உள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர் கூறினார். ஆகவே, இம்மாத இறுதிக்குள் ஏர்டெல் 5ஜி சேவை நிச்சயம் தொடங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தால், பயனாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற 4ஜி சேவையின் கட்டணத்தை அதிகரிக்க கூடும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இருப்பினும் ஏர்டெல் நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க