சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை மண் என்பதால் தமிழுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு என்பது பழமை வாய்ந்தது என்பதை அறியமுடிகிறது. மதுரை மல்லி எப்படி உலகப் புகழ் பெற்றதோ அது போல மதுரையின் அலங்காநல்லூரில் நடக்கின்ற ஜல்லிக்கட்டு போட்டியும் உலகப் பிரசித்தி பெற்றது. மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும் பாலமேடு பகுதியில் மாட்டுப்பொங்கல் நாளன்றும் அலங்காநல்லூரில் காணும் பொங்கல் அன்றும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 600 காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
தொன்று தொட்டு நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் சில விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக இடையில் இரண்டு மூன்று ஆண்டுகள் தடைபட்டது. இதை எதிர்த்து இளைஞர்கள் தானாக முன்வந்து எழுச்சியோடு போராடியதன் விளைவாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு சட்டரீதியான தடைகளைத் தகர்த்து மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தன்னெழுச்சி போராட்டம் இந்திய போராட்ட வரலாற்றில் தனியிடம் பிடிக்கிறது.
பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் பகுதியில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. வாடிவாசல் பகுதி கிழக்கு நோக்கி அமைந்திருக்க வேண்டும் என்பது மரபு. அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதிகளில் போட்டி நடைபெறும் மைதான அமைவிடம் காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட பின் கிழக்கு நோக்கி பாய்ந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால், அலங்காநல்லூரில் மட்டும் வாடி வாசல் கிழக்கு நோக்கி இருப்பினும் மைதானம் வாடிவாசலின் இடதுபுறம் இருப்பதால் காளைகள் உடனடியாக வடக்கு திசையில் திரும்பி மைதானத்தை அடையுமாறு அமைக்கப்பட்டு இருக்கும். இது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் சிறப்பம்சம் ஆகும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு என ஏராளமான விதிமுறைகளை வகுத்து அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். மைதானம் அமையும் இடம், காளைகள் ஓய்வு எடுப்பதற்கான இடம், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்படுவதற்கான வசதிகள், முதலுதவி குழு, கால்நடை மருத்துவ குழு, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக உதவி என்பன உள்ளிட்ட பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கால்நடைகளின் மருத்துவ தகுதிச் சான்று மற்றும் உரிமையாளரின் அடையாள சான்றோடு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் முன்பதிவு செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன் பெற்ற காளைகள் மட்டுமே களத்தினு கள் அனுமதிக்கப்படும். உரிய வயது, உயரம் மற்றும் எடை உடைய திமில் உடைய நாட்டின காளைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது விதி. மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஏராளமான மாடுபிடி வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதால் 50 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து சுழற்சி முறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு குழுவினர் என களத்தினுள் அனுமதிக்கப்படுவது இதுபோன்ற பெரிய அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகளில் வழக்கமாக இருக்கிறது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான உடல் தகுதி சான்று கொடுத்தால்தான் இவை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றன. நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக எல்லா காளைகளையும் அவிழ்த்து விட வேண்டும் எனும் நிர்பந்தத்தின் காரணமாக வேகவேகமாக வாடிவாசலில் காளைகள் அவிழ்க்க்கப்படுகின்றன. களத்தில் உள்ள காளை அத்துக் கோட்டை கடந்த பின்னரே அடுத்த காளை வாடிவாசலில் அவிழ்க்கப்படும். மட்டுமின்றி களத்தினுள் பங்கேற்கும் வீரர்களும் முன்பதிவு செய்து டீஷர்ட் பெற்றிருக்கவேண்டும். மருத்துவ பரிசோதனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே இந்த டி-ஷர்ட் வழங்கப்படும். இவர்கள் சுழற்சி முறையில் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூரில் சேர்ந்த வீரர்கள் மட்டும் பங்கேற்க கூடாது என்பது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது
போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகள் எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படக் கூடாது என்பது விதி. எலுமிச்சை பழம், சாராயம் போன்றவை கொடுக்கக்கூடாது. கொம்புகள் கூர்மையாக இருப்பின் அவை மழுங்கடிக்கபட வேண்டும். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் இந்த காளைகள் மைதானத்தில் அத்துக் கோடு வரையில் ஓடுவதற்கு அனுமதிக்கப்படும். இந்த பகுதிக்குள் மாடு பிடி வீரர்கள் காளைகளை அடக்க வேண்டும். கால்களையோ, கழுத்தையோ வாலையோ பிடித்து காளையை அடக்குவதற்கு அனுமதி கிடையாது. மாடுகளின் திமிலை பிடித்து அடக்கலாம். திமிலை தழுவிய படியே ஓடலாம். ஓடும் பகுதியை கடந்த பின் அதாவது கோட்டை கடந்த பின் மாடுகளை யாரும் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. கோட்டை தாண்டிய மாடுகள் நேராக ஓடி மைதானத்தை விட்டு வெளியேறும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டிருக்கும். தென்னந் தோப்பு பகுதியில் இந்த மைதானம் நிறைவடையும். இந்தப் பகுதியில் மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை வந்து பிடித்துச் செல்வர்.
எல்லைக்கோட்டை தாண்டும் வரையில் காளையின் திமிலை பிடித்த படியே கடக்கும் வீரருக்கு மாட்டை அடக்கியதற்கான பரிசும், அத்து கோட்டை கடந்த மாடுகளுக்கு பிடிபடாத மாட்டிற்கான பரிசும் வழங்கப்படுகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் சல்லிக்காசினை துணியில் முடிந்து மாடுகளின் கொம்புகளில் கட்டி இருப்பர். மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு வெகுமதியாக வழங்கப்படும். இந்த சல்லிக் கட்டு தான் காலம் மருவி ஜல்லிக்கட்டு என்று ஆனது என்றும் சிலர் சொல்கின்றனர்.
போட்டி தொடங்கியவுடன் முனியாண்டி கோயில் மாடுதான் முதலில் அவிழ்க்கப்படும். இந்த மாட்டை எந்த வீரரும் அடக்கக் கூடாது என்பது மரபு. இந்த மாடு எல்லைக் கோட்டைத் தாண்டிய பின் பிற கோவில் மாடுகள் அவிழ்க்கப்பட்டு, பின்னர் முறையாக போட்டி தொடங்கி நடத்தப்படும். இவற்றை கண்டு கழிப்பதற்கு முக்கிய பிரமுகர்களுக்கு ஒரு பார்வையாளர் மாடம், வெளிநாட்டினருக்கு ஒரு பார்வையாளர் மாடம், பொதுமக்களுக்காக ஒரு பார்வையாளர் மாடம் என மூன்று மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். பொது மக்களுக்கான பார்வையாளர் மாடத்தில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் முந்தைய நாள் இரவே வந்து இடம்பிடிக்க வேண்டும் என்பதில் இருந்தே இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் சிறப்பம்சத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07