ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரையும் ஆல் பாஸ் (All Pass) செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி, 3-வது முறையாக ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, கடந்த 25ம் தேதி ஆண்டு தேர்வு துவங்கி, நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கு நாளை 29ம் தேதியுடன் இறுதி தேர்வு முடிகிறது. இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் 'ஆல் பாஸ்' செய்ய முடிவெடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்களை குறிப்பிட்டு, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்ததற்கான பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இப்பட்டியலை பள்ளித் துணை ஆய்வாளர்களிடம் காண்பித்து அனுமதி பெற்ற பிறகு, ரிசல்ட்டை வெளியிட வேண்டும்.வருகைப்பதிவு குறைவு, கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த காரணம் கூறியும் மாணவர் தேர்ச்சி பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை 29ம் தேதியுடன் இந்தாண்டு பள்ளி நாட்கள் முடிகிறது.
இவர்களுக்கு வரும் 30ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை துவங்குகிறது.பத்தாம் வகுப்பிற்கு அடுத்த மாதம் 30ம் தேதியும், பிளஸ் 2 வகுப்பிற்கு அடுத்த மாதம் 28ம் தேதியுடன் பள்ளி நாட்கள் முடிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக, 2021-22ம் கல்வியாண்டிலும் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட உள்ளது.இது, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற அறிவிப்பு வருமோ என மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...