இந்தியாவில் கால்நடை வளர்ப்பு பல தலைமுறைகளாக ஒரு பராம்பரிய தொழிலாக இருந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விஞ்ஞான ரீதியாக கவனித்துக்கொண்டால் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
பசு மாடுகள் வளர்ப்பில் பால் மட்டுமே வருமான ஆதாரமாக இருப்பது இல்லை. பசு மற்றும் மாட்டு கோமியம் (சிறுநீர்) கரிம வேளாண்மை துறையில் மிகவும் பயன்படும் ஒரு பொருளாகும். மாட்டு சாணத்தை உலர்த்தி பைகளில் விற்றால் கூட வருமானம் பார்க்கலாம். மாட்டு கோமியமும் பஞ்சகவ்யம் போன்ற உரம் தயாரித்து விற்பனை செய்யலாம்.
பால் மதிப்பு கூட்டு பொருட்கள்
பசுமாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள், வீடுகளிலும் பால் சங்கங்களுக்கும் பால் விநியோகம் செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். மேலும், பாலில் இருந்து மோர், தயிர் மற்றும் நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம். பசு மாடுகள் வளர்ப்பு தொழில் மிகவும் நம்பிக்கைக்குரிய தொழிலாகும். நான்கு அல்லது ஐந்து மாடுகளுடன், ஒரு குடும்பம் எந்த இடையூறும் இல்லாமல் வளமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
பசுமாடுகளின் பேறுகால பராமரிப்பு
பசுமாடு கன்று ஈனும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக பால் கறப்பதை நிறுத்த வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் பசுமாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உணவுவகைகளை மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் கன்று ஈன்ற பிறகு பசுவுக்கு அதிக தீவனம் கொடுக்க வேண்டும்.
கன்று ஈன்ற பிறகு பசுமாட்டின் செரிமான பிரச்சனையை சரிசெய்ய 10 - 15 நாட்களுக்கு 3 முதல் 4 கிலோ வரை தீவனத்தை அதிகம் கொடுத்து பால் கறக்க வேண்டும். பசுமாடுகள் கன்று ஈன்ற பிறகு 60 நாட்கள் வரை அதிக பால் கொடுக்கலாம். இந்த நேரத்தில், விவசாயிகள் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கூடுதலாக அரை கிலோகிராம் அளவில் தீவனத்தை அதிகம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகும் பால் உற்பத்தி அதிகரிக்காது என்று கண்டறியப்பட்டால், அங்கேயே தீவனம் கொடுக்கும் அளவையும் நிறுத்த வேண்டும். பின்னர் அதிக சத்தான தீவனங்களைக் கொடுத்து பால் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
மருத்துவ ஆலோசனை
பசுமாடு வளர்ப்பவர்கள், கால்நடை வளர்ப்புத் துறை, பால் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் அலுவலர் அல்லது கால்நடை மருத்துவர்கள் ஆகியோருடன் இணைந்த நிறுவனங்களிலிருந்து பசு தீவனம் குறித்து கூடுதல் ஆலோசனைகளை கேட்டு பெறலாம்.