ஏற்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பில் மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஏற்காட்டில் நடைப்பெற்ற நிகழ்வில் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் உரையாற்றிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை குறித்து பேசினார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் உள்வாங்கி வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையில் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தாவர அலங்கார வடிவங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 9,749 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு ஏற்காட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாசனைப் பூண்டு, அவகோடா மற்றும் மிளகு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்காட்டினுடைய மேம்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதைப்போல் நிகழ்வில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், வேளாண்மைத் துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதவியேற்றது முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. இதனால் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறந்து விடுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 2 இலட்சம் டன் நெல் கிடைக்கிறது. நமது முதலமைச்சர் தகுந்த துறையை தான், நமது வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அந்தவகையில், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என வேளாண் அமைச்சருக்கு புகழாரம் சூட்டினார்.
நேற்று தொடங்கிய 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வருகிற 28.05.2023 வரை நடைபெறவுள்ளது. இக்கோடை விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: unsplash
மேலும் காண்க: